சேலம்: சேலம் செவ்வாய்பேட்டை அப்பாசாமிதெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (60). இவரது மனைவி நளினா (50). இவர்களது ஒரே மகள் ஐஸ்வர்யாவிற்கு திருமணமாகி, சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். சீனிவாசன், செவ்வாய்பேட்டை பஜாரில் பழைய பேப்பர் கடை நடத்தி வந்தார். இவர் மதிய சாப்பாட்டுக்கு வீட்டிற்கு செல்லும்போது, மனைவி நளினா கடையை பார்த்துக்கொள்வார். கடந்த 8ம் தேதி மதியம் வீட்டிற்கு சீனிவாசன் சாப்பிடச் சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பாததால், நளினா வீட்டுக்கு சென்று பார்த்தபோது, தலையில் அடிபட்டு சீனிவாசன் மயங்கி கிடந்தார். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் தவறி விழுந்து மயங்கி இறந்து விட்டார் எனக்கருதி சீனிவாசனின் சடலத்தை எடுத்துச் சென்று எரித்து விட்டனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்த 55 பவுன் தங்க, வைர நகைகளை காணாது கண்டு, மனைவி நளினாவும், மகள் ஐஸ்வர்யாவும் அதிர்ச்சியடைந்தனர். அப்போதுதான், யாரோ வீட்டிற்குள் வந்து கணவரை அடித்துக் கொன்று விட்டு, நகையை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுபற்றி செவ்வாய்பேட்டை போலீசில் நளினா புகார் கொடுத்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சீனிவாசனின் கடையில் வேலை பார்த்து வந்த அன்னதானப்பட்டி மணியனூரை சேர்ந்த தமிழ்செல்வன் (25) மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், நண்பர்களான வேடுகாத்தான்பட்டியை சேர்ந்த கார்த்திக் கண்ணன் (26), 17 வயது பிளஸ்2 மாணவன் ஆகிய இருவருடன் சேர்ந்து, சீனிவாசனை அடித்துக் கொன்றுவிட்டு, வீட்டில் இருந்த 55 பவுன் தங்க, வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, கார்த்திக் கண்ணன், 17 வயது மாணவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது: சீனிவாசன் கடையில் பழைய பேப்பர் பண்டல்களை வண்டியில் வைத்து தள்ளும் வேலையில் தமிழ்செல்வன் இருந்துள்ளார். அடிக்கடி அவரது வீட்டிற்கும் சென்று வந்துள்ளார். இதில், வீட்டில் நகை, பணத்துடன் சீனிவாசன் வசதியாக இருப்பதை அறிந்து கொண்டுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து அவரது வீட்டுக்கு சென்று சீனிவாசனை தாக்கினார். அப்போது கார்த்திக் கண்ணனின் கையை சீனிவாசன் கடித்துள்ளார். உடனே, அவரது தலையை பிடித்து சுவற்றில் அடித்து கொன்றுவிட்டு, நகையை கொள்ளையடித்து கொண்டு தப்பியுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திருமதி. சூர்யா பிரியா
சேலம் மாவட்ட தலைவி
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா