சென்னை : கொரோனா நெருக்கடி காரணமாக, மிகவும் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து, பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நடு முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவசர காரணங்களுக்காக பிரயாணம் மேற்கொள்ள விரும்பும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஒரு தனி கட்டுப்பாட்டறை திறக்கப்பட்டுள்ளது.
தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ அவசர காரணங்களுக்காக பொதுமக்கள் பெருநகர சென்னைக்குள்ளேயோ அல்லது தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கிடையேயோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ பயணிக்க விரும்பினால், அவர்கள் அவசரகால கட்டுப்பாட்டறை எண்.75300 01100 ஐ தொடர்பு கொண்டோ / குறுஞ்செய்தி மூலமாகவோ / வாட்ஸ்ஆப் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் அல்லது gcpcorona2020@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
மேற்கூறப்பட்ட காரணங்களுக்காக அனுமதிச்சீட்டு கோருபவர்கள் கோரிக்கை கடிதத்துடன் தேவையான அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்படி கட்டுப்பாட்டறையை கண்காணிக்க பெருநகர சென்னை காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு காவல் துணை ஆணையர் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவையானது, மேற்குறிப்பிட்டுள்ள அவசர தேவைகளுக்காக மட்டுமே தவிர, சாதாரண தேவைகளுக்கு அல்ல என தெரிவிக்கப்படுகிறது.
அவசர உதவி எண். 75300 01100
மின்னஞ்சல் முகவரி – gcpcorona2020@gmail.com
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை