சென்னை: மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் சிறந்த மேலாண்மைச் செயல்பாட்டிற்கான ‘ஸ்கோச்’ விருதுகளை சென்னை சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை பெற்றுள்ளனர்.
‘ஸ்கோச்’ விருதுகள் ஆண்டுதோறும் மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்படுகிறது. அரசின் துறைகளின் மக்கள் சேவை, சிறந்த முன் மாதிரிக்காக தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்படுகிறது.
சென்னை காவல் ஆணையரின் கனவு திட்டம்
சென்னை சட்டம் ஒழுங்கு காவல்துறையின் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் கனவுத் திட்டமான ‘மூன்றாவது கண்’ திட்டத்தின் மூலம் சென்னையில் 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றச்செயல்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.
முன்பெல்லாம் வணிக வளாகங்கள், வங்கிகள், ஏடிஎம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே சிசிடிவி காமிராக்கள் காணப்படும். தற்போது போலீஸாரின் ‘மூன்றாம் கண்’ விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பலர் சி.சி.டி.வி.யை பொருத்தி வருகின்றனர். சென்னையில் பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதற்கு வியாபார நிறுவனங்கள், சமூக அக்கறையுள்ளவர்கள் காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
குற்றம் நடப்பதை கண்டறிவது மட்டுமல்ல, குற்றச்செயல்களை தடுப்பதிலும் மூன்றாவது கண்ணாக சிசிடிவி கேமராக்கள் செயல்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதன் அடுத்த கட்டமாக சென்னையில் 5 லட்சம் சிசிடிவி கேமராக்களை அமைக்க சென்னை காவல்துறையும், ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்மூலம் சென்னையின் சட்டம் ஒழுங்கு காவல்துறை அடுத்தகட்டத்திற்கு செல்ல உள்ளது.
இத்தகைய சிறப்பான சேவையை தனது பணிக்காலத்தில் சென்னையில் செய்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு சிறந்த ஆளுமைக்கான விருது சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் வழங்கப்பட்டது. மேற்கண்ட பணியை முன் வைத்து ‘ஸ்கோச்’ விருதுக்கு சென்னை சட்டம் ஒழுங்கு காவல்துறை போட்டியிட்டது.
சென்னை போக்குவரத்து காவல்துறைக்கும் விருது
இதேபோன்று சென்னை போக்குவரத்து காவல்துறையில் பணமற்ற பரிவர்த்தனை முறையான இ சலானை அறிமுகபடுத்தியதன்மூலம் லஞ்சம், பணமுறைகேடு இல்லாத நிலை உருவானது. இது தவிர தற்போது காவல்துறையினர் அபராதம் விதிக்க நவீன கருவிகள், உடலில் பொருத்தப்பட்ட கேமராக்கள், அதி நவீன போக்குவரத்து விதிமீறலை கண்காணித்து புகைப்படம் எடுக்கும் கேமராவை அமைத்தது போன்ற காரணங்களால் போக்குவரத்து காவல்துறையும் ஸ்கோச் விருதுக்கு போட்டியிட்டது.
இந்த ஆண்டு 2 விருதுகளை சென்னை சட்டம் ஓழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறை பெற்றுள்ளது. டெல்லி அசோகா சாலையில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆப் இந்தியாவில் நடைபெற்ற விழாவில், மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடமிருந்து சென்னை கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் அருண் ஆகியோர் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
விருது கிடைக்க உறுதுணையாக செயல்பட்ட சென்னை காவல்துறையிருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள்.