அரியலூர்: தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் சற்று பின்தங்கிய மாவட்டங்களில் அரியலூரும் ஒன்று. தற்போது அரியலூர் காவல்துறையினர் செயல்படுத்தும் அரிய திட்டங்களால் பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் காவல் நிலையத்திற்குப்பட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து மூன்றாம் கண் என்று அழைக்கப்படும் 100 இடங்களில் சிசிடிவி கேமிரா அமைத்துள்ளனர். 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வசதிகளுடன் Night Version, Face Reader, High Resolutionn என அதிநவீன கேமிராக்களுக்கான ஒயர்கள் அனைத்தும்தரையில் புதைத்து நவீன முறையில் அமைத்துள்ளனர். இதற்கென ஆண்டிமடம் ஸ்டேஷனில் சிறிய அறை கட்டுப்பாட்டு அறையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பயன்பாடு வந்தப்பிறகு திருட்டு மற்றும் குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அடுத்த கட்டமாக ஆண்டிமடம் சிவன் கோவில் குளத்தை தூர்வாரும் முயற்சியினை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். பல ஆண்டுகாலமாக தூர்வாரப்படாமல் உள்ள இந்த குளத்தை பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ள ஆரம்பித்ததை அறிந்து கொண்ட தொகுதி எம்எல்ஏவும் தமிழக கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் நேரில் வந்து பார்த்து விட்டு குளத்தின் படிகளை கட்ட 10 லட்ச ரூபாயினை அளிக்க உத்தரவாதம் அளித்துள்ளார். அரியலூர் காவல் கண்காணிப்பாளர் திரு.சீனிவாசன், காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மோகன்தாஸ் மற்றும் ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் திரு.ஜெகதீசன் ஆகியோரின் முயற்சிகள் பொதுமக்களிடம் பெரும் பாராட்டை பெற்றுள்ளன.