கடலூர் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணராமன் (வயது 50) சிதம்பரம் அடுத்த ஏ. மண்டபம் பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாலை கல்யாணராமன் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் மருந்து கடைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார் அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 25 பவுன் நகைகள் 500 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, தனிப்படை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று மாரியப்பா நகர் மின்வாரிய அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் திரும்பி செல்ல முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிவபுரி சேர்ந்த சண்முகம் (45) உசுப்பூரை சேர்ந்த தினேஷ்குமார் (36) ஆகியோர் என்பதும் இவர்கள் சிவபுரி சேர்ந்த ரமேஷ் (36) என்பவருடன் சேர்ந்து கல்யாணராமன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 25 பவுன் நகைகள்,500 கிராம் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 25 பவுன் நகைகள் 500 கிராம் வெள்ளி பொருட்களையும் மீட்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரமேசை வலைவீசி தேடி வருகிறார்கள். கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்த அண்ணாமலை நகர் போலீசாரை சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் பாராட்டினார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்