சென்னை : முன்னாள் இளம் சிறார்களுக்கான வாகன ஓட்டுநர் திறன் பயிற்சி வகுப்பு சென்னை காவல் ஆணையாளர் தரமணியில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் அறவே தடுத்து, அவர்களை நல்வழிப்படுத்தி, அறிவுரைகள் வழங்கி தகுந்த தொழில் பயிற்சியுடன் பணியில் அமர்த்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட துணை ஆணையாளர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், சென்னை பெருநகரில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட முன்னாள் இளஞ்சிறார்களுக்காக அடையாறு மாவட்டத்தில் சிறப்பு தொழில் நெறி வழிகாட்டல் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது கடந்த 21.09.2020 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் திரு.விஷ்ணு, இ.ஆ.ப, அவர்களால் கிண்டி, மாநில தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் துவக்கி வைக்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தி 100 முன்னாள் இளஞ்சிறார்கள் பயன்பெற்றனர். மேலும் இதன் தொடர்ச்சியாக வாகன ஓட்டுநர் பயிற்சி பெற 19 முன்னாள் இளஞ்சிறார்கள் விருப்பம் தெரிவித்து இருந்தனர்.
மாநில தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் சென்னை பெருநகர காவல் துறை இணைந்து, சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் முன்னாள் இளஞ்சிறார்களுக்கான கட்டணமில்லாத, இலகு ரக வாகன ஓட்டுநர் திறன் பயிற்சி துவக்க விழா இன்று (27.10.2020) நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப, அவர்கள் கலந்து கொண்டு கொடியசைத்து இலகு ரக வாகன ஓட்டுநர் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். இப்பயிற்சி வகுப்பில் 19 முன்னாள் இளஞ்சிறார்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இப்பயிற்சியின் முடிவில் பயிற்சி பெறும் நபர்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் (LMV License) வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் திரு.விஷ்ணு, இ.ஆ.ப, அவர்கள், அடையார் துணை ஆணையாளர் திரு.V.விக்ரமன், இ.கா.ப, வேலைவாய்ப்பு பயிற்சி துறை அதிகாரிகள், பயிற்றுனர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் இளஞ்சிறார்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்