சென்னை: சென்னை, வீராபுரத்தை சேர்ந்த சிவா, வ/31, த/பெ.சந்திரசேகர் என்பவர் அவரது இரண்டாவது மனைவி அரசி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார் நேற்று முன்தினம் 08.03.2020 அன்று இரவு சுமார் 11.00 மணியளவில், குடிபோதையில் அவரது மனைவி அரசியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் கோபத்தில் அவ்வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று கதவை உட்புறமாக தாழிட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அரசி காவல் கட்டுப்பாட்டறை எண்.100க்கு தொடர்புகொண்டு தனது கணவர் பிரச்சனை செய்வதாக புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில், T -7 ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய செக்டார்-3 ரோந்து பணியில் இருந்த தலைமைக்காவலர் T.சரவணகுமார் (த.கா.35961) மற்றும் FOP D.பாபு ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மேற்படி வீட்டின் அறையில் இருந்த சிவாவை கதவை திறக்குமாறு கூறியபோது, சிவா கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்த தலைமைக் காவலர் மற்றும் FOP ஆகியோர் மேற்படி அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சிவாவை தூக்கி பிடித்து, அவரது கழுத்திலிருந்த புடவையை கழற்றி அவரை காப்பாற்றியுள்ளனர். பின்னர் முதலுதவி செய்து, சிவாவை எழுப்பி அவரிடம் பேச்சு கொடுத்து அறிவுறுத்தினர்.
தக்க சமயத்தில் விரைந்து செயல்பட்டு, தற்கொலையின் விளிம்பிற்கு சென்ற நபரின் உயிரை காப்பாற்றிய T-7 ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.T.சரவணகுமார் (த.கா.35961) மற்றும் FOP திரு.D.பாபு ஆகிய இருவரையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 10.03.2020 அன்று நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை