தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கீழநவலடிவிளை பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் மனைவி அம்மாள் தங்கம் (67), என்பவர் (12.01.2023) குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாககன்னிகாபுரம் பகுதியில் வயலில் புல் அறுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் திரு. ஆறுமுகம் நயினார், திரு. மோசஸ் மற்றும் காவலர் திரு. காளிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதனையடுத்து மேற்படி இறந்த மூதாட்டியின் உடலை சம்பவ இடத்தில் போக்குவரத்து வசதியின்மை காரணமாக சாலைக்கு கொண்டு வர முடியாததையடுத்து காவலர் காளிமுத்து என்பவர் 1.5 கிலோமீட்டர் தூரம் வயல்வெளி பாதையில் தனது தோளில் சுமந்து சென்று இறந்த மூதாட்டியின் உடலை சாலைக்கு கொண்டுவந்தார். இதனையடுத்து காவலர் காளிமுத்துவை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். மேற்படி காவலர் காளிமுத்துவின் மனித நேய செயலை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன், அவர்கள் இன்று 13.01.2023 அவருக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து பொன்னாடை அணிவித்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.