திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டில் கைபேசிகள் காணாமல் போனது மற்றும் திருட்டு போனது சம்பந்தமாக காவல் நிலையங்களில் 778 புகார் மனுக்கள் பதியப்பட்டும், கைபேசிகள் பறிப்பு சம்பந்தமாக 17 வழக்குகள் பதியப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்ட சைபர் பிரிவின் உதவியோடு காணாமல் போன, திருடு போன கைபேசிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்ட தனிப்படை மற்றும் சைபர் பிரிவினர் காணாமல்போன 174 கைபேசிகளை உரிய ஆவணங்கள் இன்றி பயன்படுத்திவந்த நபர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.
இது போக கைப்பேசிகளை பறித்துச் சென்றது சம்பந்தமாக 17 வழக்குகளில் 9 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு இது வரை 24 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகளை நீதிமன்றத்தில் உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி கைப்பற்றப்பட்ட கைபேசிகளை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் மலிவான விலையில் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து உரிய ஆவணங்கள், ரசீதுகள் ஏதுமில்லாமல் கைபேசிகளை வாங்க வேண்டாம் எனவும். மீறி வாங்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்