நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறும் வாகன ஓட்டிகளிடம் “இ-சலான்’ இயந்திரம் மூலம் அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாலை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அரசால் வழங்கப்படும் “ஸ்மார்ட் இ-சலான்’ இயந்திரம் மூலமாக ரசீது வழங்கப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் திங்கள் கிழமை தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு “இ-சலான்’ இயந்திரம் மூலமாக ரசீது வழங்கப்படும். வாகன ஓட்டிகள் அதற்கான அபராதத் தொகையை எஸ்பிஐ வங்கி,மற்றும் வங்கி அட்டைகள் மூலமாக செலுத்தலாம் பணம் செலுத்தும் முறையைத் தேர்வு செய்து இணைய வங்கி கணக்கின் மூலமாகவும் செலுத்தலாம். இந்த “ஸ்மார்ட் இ-சலானின்’ மூலம் போக்குவரத்து விதிகளை அடிக்கடி மீறுபவர்களை எளிதில் கண்டறியலாம்.
காவல்துறையினர் ஒரு வாகன பதிவு எண்ணைக் கொண்டு வாகனத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பதையும், அந்த வாகனம் திருட்டு வாகனமா என்பதையும் மற்றும் அந்த வாகனம் ஏதேனும் குற்றச்சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதா என்பதையும் எளிதில் அடையாளம் காணமுடியும்.
மேலும் இந்த இயந்திரத்தில் வாகன ஓட்டுநர் உரிமத்தில் உள்ள பதிவு எண்ணை பதிவு செய்தவுடன் ஓட்டுநர் உரிமம் உண்மையானதா அல்லது போலியானதா எனவும் எளிதில் கண்டறிய முடியும். “ஸ்மார்ட் இ-சலான்’ இயந்திரம் மூலம் கொடுக்கப்படும் ரசீதில் உள்ள குற்ற விவரங்கள் அனைத்தும் இணையதளத்தின் மூலமாக உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அதற்கான அபராதத் தொகையை மூன்று மாதத்திற்குள் செலுத்த தவறினால் அவரது வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
“ஸ்மார்ட் இ-சலான்’ இயந்திரம் நாகப்பட்டினம் மாவட்ட முழுவதும் போக்குவரத்து காவல்துறையினருக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆய்வாளர்களுக்கு என மொத்தம் 45 இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த “இ-ரசீது’ மூலம் அபராதம் வசூல் தொடங்கப்பட்டு வருகிறது .மேலும் இ-சலானில் பதிவிடபட்ட தொகையினை உங்கள் வசதிகளுக்கு ஏற்ப உரிய பரிவர்த்தனைகள் மூலமாக அபராதத் தொகையை செலுத்தலாம் எனவும் மேலும் இ-சலான் வழங்காமல் அபராதத் தொகையை வழங்க வேண்டாம் எனவும் மாறாக இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து கீழ் கண்ட தொலைபேசி எண்களில்
9498100905,
8939602100,
04365242999,
04365248119,
24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.