சென்னை: 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த அரும்பாக்கம் சிறார் மன்ற (Police Boys & Girls Club) மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.
அண்ணாநகர் மாவட்டம், அரும்பாக்கம் காவல் நிலைய எல்லையில் காவல் சிறார் மன்றம் (Police Boys & Girls Club) இயங்கி வருகிறது. சிறார் மன்றத்தில் உள்ள 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அதிக மதிபெண் பெற வசதியாக இரவு நேரத்தில் சிறப்பு பாடசாலை அமைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. அதன் பலனாக நடந்து முடிந்த 10ம்வகுப்பு பொது தேர்வில் 35 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 35 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொது தேர்வில் 47 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 46 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற காவலர் சிறார் மன்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு 08.11.2019 நேற்று மாலை அரும்பாக்கம் சிறார் மன்றத்தின் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்,திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு சிறளப்பு வகுப்புகள் எடுத்த ஆசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிபெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களை பாராட்டி அவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் காவல் துறை கூடுதல் இயக்குநர் (தலைமையிடம்) திருமதி.சீமா அகர்வால், இ.கா.ப, வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் திரு.ஆர்.தினகரன், இ.கா.ப, அண்ணாநகர் காவல் மாவட்ட துணை ஆணையர் திரு.எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப, திரு.எஸ்.எஸ்.குமார் ( MD, Veltech Auto Parts India Pvt Ltd) சிறார் மன்ற முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.