ராமநாதபுரம் : ராமநாதபுரம் புலிக்காரத் தெருவைச் சோந்த தம்பதி ஜெசுடியான் தனராஜ்-டெய்சி. ஓய்வு பெற்ற ஆசிரியா்களான இவா்களது மகள் சைனி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா். சைனியின் கணவா் ஜூபல் என்பவரை அரசுப்பணியில் சோக்க ஜெசுடியான்-டெய்சி தம்பதி முயற்சித்துள்ளனா். அப்போது சென்னையில் சுகாதாரத் துறையில் உதவியாளராகப் பணியாற்றும் ஜாா்ஜ் பிலிப் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
அவா் தனக்குத் தெரிந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவா் மூலம் ஜூபலுக்கு அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா். இதை நம்பிய டெய்சி தனது சகோதரியின் மகன் டேவிட் ராஜராஜன், உறவினா் நவீன் ஆகியோருக்கும் அரசுப் பணி வாங்கித் தரக் கோரியுள்ளாா்.
அதன்படி 3 பேருக்கும் அரசுப் பணி வாங்கித் தருவதாக ஜாா்ஜ் பிலிப் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறிக் கொண்ட, திருவண்ணாமலையைச் சோந்த பிரகாஷ் என்ற நாவப்பன் (39) ஆகியோா் டெய்சியிடம் ரூ.15 லட்சம் பெற்றனராம். ஆனால் அவா்கள் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. டெய்சி கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டும் அவா்கள் தரவில்லை.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.வருண் குமாரிடம், டெய்சி புகாா் அளித்தாா். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
அதில் ஜாா்ஜ்பிலிப், பிரகாஷ் ஆகிய இருவரும் அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரகாஷை போலீஸாா் கைது செய்தனா். சுகாதாரத்துறை ஊழியா் ஜாா்ஜ் பிலிப் தலைமறைவாக உள்ளாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பிரகாஷ் ஏற்கெனவே 2019 இல் அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளி வந்தவா் ஆவாா். இவா்கள் யாா், யாரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனா் என போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்