சென்னை: நாளை காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரை, கிண்டி பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை இன்று அமலுக்கு வந்துள்ளது.
பொங்கல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா நோய்த் தொற்று பரவலால் முன்னதாக காணும் பொங்கலன்று கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. ஆனால் வார விடுமுறை என்பதால் மக்கள் அதிகம் கூட வாய்ப்பிருப்பதாக கூறி காணும் பொங்கலுடன் இரண்டு நாட்கள் சேர்த்து, அதாவது ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்து.
இந்நிலையில் அந்த தடை உத்தரவானது இன்று அமலுக்கு வந்துள்ளது. மேலும் வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கிண்டி தேசிய பூங்காவிலும் மக்கள் கூட அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் காவல் துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வராத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, மெரினா கடற்கரைக்குள் வாகனங்களில் செல்ல முடியாதபடி சர்வீஸ் சாலை முழுவதும் தடுப்பு வேலி அமைத்து வருகின்றனர்.
