மதுரை: விருதுநகர் பகுதியைச் சேர்ந்த, 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஹரிஹரன், ஜூனத்அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளி மாணவர்கள் நான்கு பேரும், ராமநாதபுரம் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. 8 பேர் மீதும் சிபிசிஐடி போலீசார், 7 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக, திருவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இதனையடுத்து சிறையிலிருந்த 4 பேரும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இது குறித்த வழக்கை ( பொறுப்பு ) நீதிபதி கோபிநாத் விசாரித்தார். ஹரிஹரன், ஜுனத்அகமது, மாடசாமி, பிரவீன் உள்ளிட்ட 4 பேரையும் வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து 4 பேரையும், சிபிசிஐடி போலீசார் விருதுநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி