திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அருணகிரி, இவர் மாணவர் விடுதி காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி, தோப்பூர் மற்றும் கல்யாணமந்தை கிராமங்களில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து விடுதி மற்றும் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசி, பாமாயில், பருப்பு, உள்ளிட்ட பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த உணவு பொருள் கடத்தல்தடுப்பு பிரிவு தனி தாசில்தார் ஜெகதீசன், துணை தாசில்தார் சீதாராமன், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார், ஜமுனாமரத்தூர் போலீசார், மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர், அருணகிரியின் வீட்டிற்கு சென்றனர்.
அந்தச் சமயம் சரக்கு வேனில் ரேஷன் அரிசியை தம்பதியினர் கடத்த முயன்றுள்ளனர். இதையடுத்து போலீசார் வருவதை அறிந்த அருணகிரியும் சாந்தியும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினர். இதையடுத்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் சரக்கு வேனையும், 8 டன் எடை கொண்ட 158 ரேஷன் அரிசி மூட்டைகளும், பருப்பு, பட்டாணி, மிளகு, போன்றவை கொண்ட 2 மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய கணவன், மனைவியை வலைவீசி தேடி வருகின்றனர்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்