சென்னை : சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் 19.03.2022 மற்றும் 20.03.2022 ஆகிய தேதிகளில் 73 இடங்களில் சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது, பிழையான பதிவு எண் தகடுகள் (defective Number Plate) கொண்ட 2,306 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 826 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. On 19.03.2022 and 20.03.2022, Greater Chennai Traffic Police conducted special drive at 73 places and registered cases against 2,306 vehicles with defective number plates. 826 vehicles parked in unauthorized places were seized and charged. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை பெருநகரில் விபத்துக்களை குறைப்பதற்கும், சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்வதுடன் சிசிடிவி கேமராக்களின் துணையுடனும் நேரடி தொடர்பில்லாத முறையில் (Contact less enforcement) வழக்குகளை பதிவு செய்தும் வருகின்றனர். சமீபகாலமாக பெரும்பாலான வாகனங்களில் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் பதிவு எண் தகடு (Registration Number Plates) மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக உள்ளது (Defective Number Plates). இந்த பிழையான பதிவு எண் தகடுகள் கொண்ட வாகனங்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் போதும் விபத்துக்கள் ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் பொழுதும் அவற்றின் பதிவு எண்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் சென்னை பெருநகரில் பெரும்பாலான இடங்களில் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி விட்டு செல்வது அதிகமாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.
எனவே பிழையான பதிவு தகடு கொண்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சாலையோரங்களில் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை கட்டுப்படுத்தவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் 19.03.2022 மற்றும் 20.03.2022 ஆகிய தேதிகளில் சிறப்பு நடவடிக்கையாக 73 இடங்களில் சிறப்பு தணிக்கை மேற்கொண்டு அதிக அளவிலான வழக்குகள் பதிவு செய்தும், அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை கைப்பற்றியும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த சிறப்பு நடவடிக்கையில் 19.03.2022 மற்றும் 20.03.2022 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் பிழையான பதிவு எண் தகடுகள் (defective Number Plate) கொண்ட 2,306 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 826 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆகவே வாகன ஓட்டிகள் மோட்டார் வாகனங்களின் விதிகளின்படி வாகன பதிவு எண் தகடை அமைக்க வேண்டுமெனவும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் தங்களது வாகனங்களை நிறுத்தும் படியும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இதுபோன்ற சிறப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது.