இந்தியாவின் 72-வது ஆண்டு சுதந்திர தினம் இன்று ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை 7.30 மணியளவில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில், புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில், காலை 9.15 மணியளவில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி, மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர், போர் நினைவுச் சின்னத்தில், மறைந்த வீரர்களுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, புனித ஜார்ஜ் கோட்டை முன் வரும் முதல்வருக்கு முப்படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அறிமுகப்படுத்திவைத்தார். தொடர்ந்து, அவர் திறந்த ஜீப்பில் ஏறி முப்படையினர், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அதன்பின் கோட்டை கொத்தளத்துக்கு சென்ற முதல் அமைச்சர் பழனிசாமி, தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார்.
உரை முடிந்ததும், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா, முதல்வர் நல் ஆளுமை, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப் பாக செயல்பட்டவர், சிறந்த உள்ளாட்சி அமைப்பு உள்ளிட்ட விருதுகளை வழங்க உள்ளார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு புனித ஜார்ஜ் கோட்டை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோட்டை கொத்தளத்துக்கு எதிரில், பிரம் மாண்ட மேடைகள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும், கோட்டையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.