திருச்சி: 7வது சம்பள கமிஷன் படி தமிழக அரசு ஊழியர்களுக்கும், அரசு ஓய்வூதியர்களுக்கும் விரைவில் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று ஓய்வு காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்ட காவல்துறை ஓய்வு பெற்ற அதிகாரிகள் நலச்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் 8ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. சங்க ஆலோசகர் சண்முகம் தலைமை வகித்தார். தலைவர் நல்லசங்கி முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயராமன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் அருணாச்சலம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். அமைப்பு செயலாளர் தீனதயாளன் தீர்மானத்தை வாசித்தார்.
மேலும் ஓய்வூதியர்களுக்கு காகிதப் பதவி உயர்வு கொடுத்து பணப்பலனை கொடுக்க வேண்டும், திருச்சி மாநகரில் ஆசிரியர் இல்லம் வழங்கியது போல காவலர்களுக்கு காவலர் இல்லம் வழங்க வேண்டும்.
7வது சம்பள கமிஷன் படி தமிழக அரசு ஊழியர்களுக்கும், அரசு ஓய்வூதியர்களுக்கும் விரைவில் சம்பள உயர்வு வழங்க வேண்டும்.
ராணுவ துறையில் உள்ளது போல காவல் துறையினருக்கும் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
குற்ற தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு குறைந்து விட்டது. பணியில் இருக்கும் காவல் துறையினர் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளை பாலமாக செயல்படுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் காவலர் நலசங்ச மாநிலத்தலைவர் சக்திவேலு, மாவட்ட துணை தலைவர் சௌந்தரராசன், சங்க மாவட்ட மற்றும் வட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.