கடலூர்: கடலூர் தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா வருகிற 16–ந் தேதி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடக்கிறது. இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
இதற்காக மஞ்சக்குப்பம் மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு. பந்தலின் உள்ளே 80 அடி அகலம் 40 அடி நீளத்தில் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பந்தல் மற்றும் விழா மேடையை அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விழா மேடையின் முன்பு துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடக்கு மண்டல காவல் ஐ.ஜி. திரு.ஸ்ரீதர் நேற்று காலை கடலூர் வந்தார். அவரை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திரு.பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் வரவேற்றனர்.
பின்னர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடைபெற உள்ள மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு வந்த ஐ.ஜி. திரு.ஸ்ரீதர் அங்கு அமைக்கப்பட்டுள்ள விழா பந்தலை பார்வையிட்டார். தொடர்ந்து காவல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது விழா மேடைக்கு முதல்–அமைச்சர், அமைச்சர்கள் வந்து செல்லும் பாதை, பொதுமக்கள் வந்து செல்லும் பாதை, முக்கிய பிரமுகர்கள் அமரும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் இது குறித்து காவல் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கடலூரில் சுமார் 1,500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வேதரத்தினம், கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நரசிம்மன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர்(பொறுப்பு) திரு.உதயகுமார் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.