திருப்பூரில், 300க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் உள்ளன. சாயக்கழிவு நீரை சுத்தம் செய்ய, 18 பொது சுத்திகரிப்பு மையங்களும், 100 தனியார் சுத்திகரிப்பு மையங்களும், இயங்குகின்றன சுத்திகரிப்பின் இறுதிநிலையில், சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட் கலந்த, கழிவு உப்பு கிடைக்கிறது. இவற்றை அகற்ற வழிகள் கண்டறியப்படவில்லை.மாசுகட்டுப்பாடு வாரிய உத்தரவுப்படி, கழிவு உப்பு அந்தந்த வளாகத்திலேயே பாதுகாப்பாக சேகரிக்கப்படுகின்றன. அவ்வகையில், மொத்தம் 45 ஆயிரம் டன் கழிவு உப்பு தேக்கி வைக்கப்பட்டுள்ளது.மூன்று லாரிகள் சிக்கின கடந்த 3ம் தேதி காலை, 9:00 மணியளவில், துாத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே சிந்தளகட்டை பகுதியில், கழிவு உப்புக்களை கொட்டிய மூன்று லாரிகள் சிக்கின.இந்த வாகனங்களை கைப்பற்றிய வருவாய்த்துறையினர், போலீசில் புகார் அளித்துளித்தனர்.முதல்கட்ட விசாரணையில், திருப்பூர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து, மொத்தம் 126 டன் கழிவு கழிவு உப்பு ஏற்றி வந்தது தெரியவந்துள்ளது. லாரி டிரைவர் மற்றும் கிளீனர்கள் சுந்தரேஷ்வரன், அய்யாசாமி, முத்துப்பாண்டி, தீபன், கணேசமூர்த்தி, சங்கர் மற்றும் உடந்தையாக இருந்த உள்ளூரை சேர்ந்த கண்ணன், பெருமாளை ஒட்டப்பிடாரம் போலீசார் கைது செய்துள்ளனர்.திருப்பூரில் பரபரப்பு சுத்திகரிப்பு மைய கழிவு உப்புகளுடன் வாகனங்கள் பிடிபட்டிருப்பது, திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டோரை, ஒட்டப்பிடாரம் போலீசார் நேற்று திருப்பூர் அழைத்துவந்தனர்; கழிவு உப்பு ஏற்றிய நிறுவனம் குறித்து விசாரணை நடத்தினர்.எந்த சுத்திகரிப்பு மையம் கழிவு உப்பை அனுப்பிவைத்தது என கண்டறிய மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் குழு களமிறங்கியுள்ளது.
ஒவ்வொரு மையத்திலும் தேக்கிவைக்கப்பட்டுள்ள உப்பு அளவீடு, அதுசார்ந்த பதிவேடுகளை கைப்பற்றி ஆய்வு நடக்கிறது.சுத்திகரிப்பு மையங்கள், கண்காணிப்பு கேமராக்களின் ஒருமாத பதிவுகளை வழங்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.துாத்துக்குடிக்கே உப்பா…உப்பு விவசாயத்தில் துாத்துக்குடி முன்னிலை வகிக்கிறது. சாயக்கழிவு சுத்திகரிப்பில் மிஞ்சும் கழிவு உப்புக்களை மறு பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வழிமுறைகள் கண்டறியப்படவில்லை. இந்நிலையில், உப்பு விளைச்சல் மிகுந்த நகருக்கு, அபாயகரமான கழிவு உப்பு கொண்டுசெல்லப்பட்டது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது.