புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மருதாள்மலை பகுதியில் வசித்து வந்தவர் லீலாவதி. இவரது மகன் சந்தோஷ். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சந்தோஷ் தனது தாயிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் தாய் லீலாவதி பணம் தர மறுக்கவே சந்தோஷ் ஆத்திரத்தில் தாயின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். லீலாவதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை தொடர்ந்து தாயை கொன்ற வழக்கில் சந்தோஷ் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த வழக்கானது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மாவட்ட முதன்மை நீதிமன்ற வழக்கில் இன்று நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பளித்தார். அதில் செலவுக்கு பணம் தராததால் தாயை தீ வைத்து எரித்து கொன்ற மகன் சந்தோஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எந்த சலுகையும் இன்றி 40 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், தவறை உணர்ந்து திருந்த சந்தோஷை மூன்று மாதம் தனிமை சிறையில் அடைக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.