சென்னை: ருத்ரேஷ் (வ/21) என்பவர் சென்னை, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். ருத்ரேஷ் கடந்த 08.04.2022 அன்று லேப்டாப்பை தனது அறையில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டு திரும்ப வந்த பார்த்த போது அறையில் வைத்திருந்த லேப்டாப் திருடு போனது தெரியவந்துள்ளது. இது குறித்து ருத்ரேஷ் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
வண்ணாரப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். மேலும் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி லேப்டாப் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட தமிழ்செல்வன் (வ/25) செம்மஞ்சேரி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 31 விலை உயர்ந்த லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் எதிரி தமிழ்செல்வனின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் என்பதும், இவர் சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்
விடுதிகளுக்கு சென்று லேப்டாப்களை திருடி விற்பனை செய்து கிடைத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். மேலும் இவர் கேரளா, குஜராத், டில்லி, போன்ற வெளிமாநிலங்களுக்கு சென்று அங்கு உள்ள மருத்துவக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாணவர்களின் லேப்டாப்களை திருடியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இவர் மீது கேரளா மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் லேப்டாப் திருட்டு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.