திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே உள்ள அதிகாரிப்பட்டியை சேர்ந்த மனோகர்(50), அதே பகுதியில், மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். கடைக்கு பின்புறம் இவரது வீடு உள்ளது. நேற்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டில் மனைவி மணிக்கொடி மற்றும் குழந்தைகளுடன் தூங்க சென்று விட்டார். நள்ளிரவு 2 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக, வீட்டை விட்டு வெளியே வந்தார்.
அப்போது மளிகை கடையின் பூட்டு பூட்டப்பட்டிருந்த நிலையில், மேற்கூரை ஓடுகள் கீழே சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு கல்லாவில், வைத்திருந்த ரூ.12 லட்சம் ரொக்க பணம் மற்றும் 30 பவுன் நகைகள், கொள்ளை யடிக்கப்பட்டிருந்தன. கடந்த வாரம் தனக்கு சொந்தமான பொன்நகரத்தில், இருந்த இடத்தை விற்று அந்த பணத்தை கடையில் வைத்திருந்தார். இதுகுறித்து சாணார்பட்டி, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.