தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் சுயம்புலிங்கம் (46) என்பவர் காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று (27.03.2022) இரவு அவரது கடையை பூட்டி விட்டு கடையில் வேலை பார்க்கும் ஆறுமுகநேரியை சேர்ந்த மணி என்பவரை அவரது ஊரில் இறக்கி விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று அவரை இறக்கிவிட்டு பேயன்விளை பகுதியில் ஒரு பள்ளி அருகே வந்து கொண்டிருந்த போது அங்கு நம்பர் பிளேட் அல்லாத பைக்கில் வந்த 3 நபர்கள் முகவரி விசாரிப்பது போல் அவரை வழிமறித்துள்ளனர்.
உடனடியாக பைக்கில் வந்தவர்கள் சுயம்புலிங்கத்தை அவதூறாக பேசி கத்தியை காட்டி அவர் வைத்திருந்த ரூபாய் 10,000/- பணம் மற்றும் ஒரு செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சுயம்புலிங்கம் இன்று அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் திருச்செந்தூர் காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப அவர்களிடம் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் திருச்செந்தூர் காவல் உதவி கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் தலைமையிலான போலீசார் சிசிடிவி கேமிரா பதிவுகளின் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், முத்தையாபுரம் அய்யன்கோவில் தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் பாக்கியலட்சுமணன் (எ) முகேஷ் (21), முள்ளக்காடு எம.சவேரியார்புரத்தைச் சேர்ந்த சூசைராஜ்குமார் மகன் ராஜா பிரதீப் (20) மற்றும் முத்தையாபுரம் ராஜீவ்நகரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் சுலோசின் (21) ஆகியோர் மேற்படி சுயம்புலிங்கத்திடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக போலீசார் மேற்படி எதிரிகள் 3 பேரையும் இன்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.