கடலூர்: ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகளின் இனப்பெருக்க காலம் ஆகும். இந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் கடலோர கிராமங்களில் ஆலிவ்ரெட்லி இன ஆமைகள் கடற் கரையோரம் முட்டையிட்டு செல்லும்.
ஆனால் இந்த முட்டைகளுக்கு பாதுகாப்பு இல்லை. நாய் போன்ற விலங்குகள் அவற்றை உடைத்து விடுகின்றன. மேலும் கடற்கரையோரம் மனிதர்கள் நடந்து செல்லும்போது முட்டைகள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. இதனால் ஆமைகள் இனம் அழிந்துபோகும் நிலை உருவானது.
இதை தடுக்க ஆண்டுதோறும் வனத்துறையினர் பொரிப்பகம் அமைத்து கடற்கரையோரம் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து வந்து பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து பின்னர் முட்டையில் இருந்து ஆமைகுஞ்சு வெளிவந்ததும் அவற்றை கடலில் கொண்டு விடுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு கடலூர் தாழங்குடா முதல் சாமியார்பேட்டைக்கும் இடையே உள்ள 10 கடலோர கிராமங்களில் சேகரிக்கப்பட்ட 7 ஆயிரத்து 700 முட்டைகள் கடலூர் துறைமுகம் அருகே உள்ள சொத்திக்குப்பம் பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதில் 274 முட்டைகளில் இருந்து பொரித்த ஆமைக்குஞ்சுகள் வெளிவந்தன.
இதையடுத்து ஆமைகுஞ்சுகளை கடலில் விட வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி மாவட்ட வன அலுவலர் ராகுல் தலைமையில் வன சரகர் அப்துல் ஹமீது, வனவர் சதீஷ், வனபாதுகாவலர் ஆதவன் ஆகியோர் சொத்திக்குப்பம் கடற்கரைக்கு சென்றனர்.
பின்னர் பொரிப்பகத்தில் இருந்து ஆமை குஞ்சுகளை வெளியே கொண்டு வந்து கடற்கரையோரம் பாதுகாப்பாக விட்டனர். அந்த ஆமைக்குஞ்சுகள் மெதுவாக தவழ்ந்தபடி கடலை நோக்கி சென்றன. கடல் நீரில் மூழ்கியதும் அவை நீந்தி புது உலகை நோக்கி பயணித்தன.
இது குறித்து வனச்சரக அலுவலர் அப்துல்ஹமீது கூறும்போது, கடந்த ஆண்டு 4 ஆயிரம் முட்டைகளை சேகரித்து பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து, பின்னர் குஞ்சுபொரித்ததும் அவற்றை கடலில் கொண்டு விட்டோம். இந்த ஆண்டு 7 ஆயிரத்து 700 முட்டைகளை சேகரித்துள்ளோம். கடந்த ஆண்டை விட 3 ஆயிரத்து 700 முட்டைகள் கூடுதலாக சேகரித்துள்ளோம். சேகரித்து வைக்கப்பட்ட நாளில் இருந்து 45 முதல் 60 நாட்களுக்குள் குஞ்சுபொரித்து விடும். அதன்படி முதல் கட்டமாக 274 முட்டைகளில் இருந்து பொரித்த ஆமை குஞ்சுகளை கடலில் விட்டுள்ளோம். மீதமுள்ள முட்டைகளில் இருந்து பொரித்து வரும் ஆமைக்குஞ்சுகளும் படிப்படியாக கடலில் விடப்படும் என்றார்.