கடலூர்: தமிழகத்தில் 2–ம் நிலை காவலர், சிறை வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. கடலூர் மாவட்டத்தில் கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, மஞ்சக்குப்பம் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, குமாரபுரம் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி, கிருஷ்ணசாமி கலை, அறிவியல் கல்லூரி, கிருஷ்ணசாமி பாலிடெக்னிக், கிருஷ்ணசாமி எக்செலன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்பயிற்சி கல்லூரி என 8 மையங்களில் எழுத்துதேர்வு நடந்தது.
தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. காலை 10 மணிக்கு முன்னதாகவே தேர்வர்கள் தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். சரியாக 10 மணிக்கு எழுத்துத்தேர்வு தொடங்கி 11–20 மணி வரை நடைபெற்றது. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 4 ஆயிரத்து 844 பெண்கள் உள்பட 27 ஆயிரத்து 657 பேரில் 23 ஆயிரத்து 85 பேர் தேர்வு எழுதினார்கள்.
இத்தேர்வில் தேர்வுக்கூட கண்காணிப்பாளர் பணி, மேற்பார்வையாளர் பணி, காவல் பணி என அனைத்து பணிகளையும் காவல்துறையினரே செய்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் செய்திருந்தார். மேலும் அவர் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஏற்பாடுகளை பார்வையிட்டார். இத்தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கூறினார்கள்.