சென்னை : சென்னையில், பொது இடங்களில், போஸ்டர் ஒட்டிய 184 பேர் மீது, காவல் துறையினர் , வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு சென்னை மாநகரை துாய்மையாகவும், அழகுடன் பராமரிக்க, ‘சிங்கார சென்னை 2.0’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள், 2019ன் படி, பொது மற்றும் தனியார் இடங்களில், குப்பை மற்றும் கட்டுமான கழிவுகள் கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பொது இடங்களில், ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அங்கு, தமிழகத்தின் கலாசாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான, வண்ண ஓவியங்கள் வரையப்படுகின்றன.
இவற்றை மீறி, சுவரொட்டிகள் ஒட்டியர்வகள், பொது இடங்களில், குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 27, ம் தேதி முதல் ஜூன் 10ம் தேதி தேதி வரை, பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியது தொடர்பாக 184 புகார்கள் அளிக்கப்பட்டு, காவல் நிலையத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தவிர, குப்பை கொட்டியவர்களிடமிருந்து 3.85 லட்சம் ரூபாய்; கட்டுமான கழிவுகள் கொட்டியவர்களிடமிருந்து 4.04 லட்சம் ரூபாய்; போஸ்டர் ஓட்டியவர்களிடமிருந்து 75 ஆயிரம் ரூபாய் என, 8.64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொது இடங்களில், குப்பை கொட்டுவது, சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்த்து, அனைவரும் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.