சென்னை: சென்னையில் கடந்த 4 நாட்களில் இருசக்கர வாகனங்களை அபாயகரமாக ஓட்டி சாகசம் செய்த 18 நபர்கள் கைது. 3 இளஞ்சிறார்கள் பிடிபட்டனர். மேலும் 14 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 21 விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல். சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டனர். மேற்படி சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, சட்டம் & ஒழுங்கு காவல் ஆளிநர்கள் மற்றும் ஆயுதப்படைக்காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் நேப்பியர் பாலம் முதல் அடையார் திரு.வி.கா.பாலம் வரை, இராதகிருஷ்ணன் சாலை, வண்ணாரப்பேட்டை மின்ட் மற்றும் வியாசர்பாடி, அம்பேத்கர் சாலை போன்ற முக்கிய சாலைகளில் தீவிரமாக கண்காணித்து, மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 19.03.2022 அன்று நள்ளிரவு மெரினா இராதாகிருஷ்ணன் சாலையில் இளைஞர்கள் சிலர் அபாயகரமான முறையில் தங்களது இருசக்கர வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்பேரில், அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது, இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1) முகேஷ் (வ/20) 2) ரோமன்அல்கிரேட் (வ/23) 3) ஹரிகரன் (வ/21) 4) முகமது சாதிக் (வ/20) 5) முகமது ரகமத்துல்லா (வ/20) 6) முகமது ஆசிப் (வ/19) ஆகிய 6 நபர்களை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய 2 இளஞ்சிறார்களை பிடித்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 1 கே.டி.எம், 4 யமஹா, 1 ஆக்டிவா என மொத்தம் 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 20.03.2022 அன்று ஸ்டான்லி ரவுண்டானா முதல் மூலக்கொத்தளம் சிக்னல், பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, அங்கு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அபாயகரமாக இருசக்கர வாகனங்களை இயக்கி சாகசம் செய்த 1) அஜித்குமார் (வ/21) சென்னை 2) பிரவீன்குமார் (வ/23) கொருக்குப்பேட்டை 3) சதாம் உசேன் (வ/22) கொருக்குப்பேட்டை ஆகிய மூவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். மேலும் 16 வயதுடைய இளஞ்சிறாரை பிடித்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். அவர்களிடமிருந்த 2 விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 21.03.2022 அன்று வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லூரி சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அபாயகரமாக இருசக்கர வாகனங்களை இயக்கி சாகசம் செய்த 1) பாலாஜி (வ/20) புது வண்ணாரப்பேட்டை 2) ஹரீஸ் குமார் (வ/22) தண்டையார்பேட்டை 3) மோவின் (வ/20) தண்டையார்பேட்டை 4) சல்மான் (வ/19) திருவொற்றியூர் 5) டிவின்குமார் (வ/20) தண்டையார்பேட்டை ஆகிய 5 நபர்களை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 3 விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இராயப்பேட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 20.03.2022 அன்று ஆர்.கே.சாலை & டாக்டர் நடேசன் சாலை சந்திப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, அங்கு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அபாயகரமாக இருசக்கர வாகனங்களை இயக்கி சாகசம் செய்த 1) கிருஷ்ணன் (வ/19), 2) பவன் (வ/22) கோயம்பேடு 3) விக்னேஷ் (வ/19) கோயம்பேடு 4) சந்தோஷ் (வ/20) கோயம்பேடு 5) கோபி (வ/21) நெற்குன்றம் 6) ஆல்வின் (வ/21) நெற்குன்றம் 7) தமிழரசன் (வ/19) விருகம்பாக்கம் ஆகிய 7 நபர்களை பிடித்து மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்து 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7,500/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த 7 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து ரூ.1,400/- அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்படி நபர்களின் பெற்றோர்களை நேரில் வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மீண்டும் இது போன்று பைக் சாகசத்தில் ஈடுபடக்கூடாது என்று மேற்படி நபர்களிடம் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 22.03.2022 அன்று இரவு சுமார் 11.00 மணியளவில் புழல், ஆட்டு சந்தை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, அங்கு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அபாயகரமாக இருசக்கர வாகனங்களை இயக்கி சாகசம் செய்த 1) மோசஸ் (எ) மொய்தீன் (வ/19) திருவொற்றியூர் 2) கிஷோர்குமார் (வ/19) திருவொற்றியூர் 3) சித்தார்த் (வ/19) பட்டாபிராம் 4) சூர்யா (வ/23) அம்பத்தூர், சென்னை ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்த 3 விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர் 4 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் துறையினர் ஏற்கனவே பைக் ரேஸில் ஈடுபடுவது குறித்து அடிக்கடி எச்சரிக்கை விடுத்தும், பைக் ரேஸில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தும், மேலும் இளைஞர்கள் மற்றும் இளஞ்சிறார்களின் பெற்றோர்களையும் வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் இருசக்கர வாகனங்களை மாற்றியமைப்பதும் (Modify) சட்ட விரோதமானது ஆகும். எனவே இருசக்கர வாகனங்களை மாற்றியமைக்கும் நபர்கள் பற்றிய விபரங்களை சம்பந்தப்பட்ட மெக்கானிக்குகள் (Mechanic) அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், மீறி பைக் ரேஸில் ஈடுபடும் நபர்கள் மற்றும் இளஞ்சிறார்கள் மீது சட்டபூர்வமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
மேலும் 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் மோட்டார் வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றம் ஆகும், இவ்வாறு இளஞ்சிறார்கள் இருசக்கர வாகனங்களை இயக்கி விபத்து ஏற்படுத்தினால், இளஞ்சிறார்களுக்கும் சாலையில் செல்பவர்களுக்கும் காயங்கள் உண்டாகி, அசாம்பவித சம்பவங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் பெற்றோர்கள், 18 வயது நிரம்பாத தங்களது பிள்ளைகள் இருசக்கர வாகனங்களை இயக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்குமாறும், மீறி வாகனங்களை ஓட்டும் இளஞ்சிறார்களின் பெற்றோர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது.