சென்னை: சென்னையில் 15,621 காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று தேர்வானவர்களுக்கான பணிநியமன ஆணை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர் தமிழக காவல்துறையில் மூன்றில் ஒருபங்கு பெண் காவலர்கள் உள்ளதாக கூறினார். தேசிய ஒருமைப்பாட்டை பேணிக்காத்து, நாட்டின் ஒற்றுமைக்காகவும், தீவிரவாதம் தலைதூக்காமலும் காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக காவல்துறையினரை வெகுவாக பாராட்டினார்.
மேலும் பேசிய அவர் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக, தமிழக காவல்துறை செயல்பட்டு வருவதாக பெருமையுடன் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் நாட்டிலேயே முதல்முறையாக திருநங்கைகளுக்கு காவல்துறையில் பதவி வழங்கியது தமிழகம் தான் என்றார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்திருப்பதாக தெரிவித்தார்.