சென்னை : சென்னை, மயிலாப்பூர், லஸ் சர்ச் சாலையில், சர்வே எண், 3333ல் உள்ள, 42 கிரவுண்டு, 1,566 சதுர அடி மனை, கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது. அதனை, மயிலாப்பூர் கிளப் என்ற நிறுவனத்திற்கு, 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது. 2000ம் ஆண்டுடன் குத்தகை, காலம் முடிந்தது. அந்த இடத்தில் மூன்று கிரவுண்டு, 736 சதுர அடி பரப்பளவில் செயல்பட்டு வந்த, ரானடே நுாலகத்திற்கு வாடகை, நிர்ணயம் செய்து, கோவிலின் நேரடி வாடகைதாரராக மாற்றப்பட்டது. அந்த கட்டடத்தின் மாடி பகுதியை, வணிக நோக்கில் பட்டய வகுப்புகள், கச்சேரி ஆகியவற்றுக்கு வாடகைக்கு விட்டு, வசூலித்து வந்தனர்.
அறநிலையத்துறை அனுமதியின்றி, முதல் தளம் கட்டும் முயற்சியில், வாடகைதாரர்கள் செயல்பட்டனர். இதையடுத்து, 2016 டிச., மாதம், சம்பந்தப்பட்ட வாடகைதாரரின், உரிமம் ரத்து செய்யப்பட்டது. உரிய வாடகை செலுத்தாமல், விதிமுறையையும் மீறியதால் அவரை ஆக்கிரமிப்பாளராக கருதி, காலி செய்து அகற்ற பிப்., மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கோவில், இணைக் ஆணையர் காவேரி முன்னிலையில் அந்த கட்டடம், சீலிடப்பட்டுகோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது.