ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையில், தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டும், காவல் துறையில் சார்ந்த 100 காவல்துறை அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையில் 10 தீயணைப்பு துறை அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் 10 சிறைதுறை அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் 6 அலுவலர்களுக்கும் மற்றும் விரல்ரேகைப் பிரிவில் ஒரு காவல் கண்காணிப்பாளருக்கும் ஒரு காவல் துணை கண்காணிப்பாளருக்கும் ஆக மொத்தம் 128 பேருக்கு, அவர்களின் பாராட்டுக்குரிய பணியினை அங்கீகரிக்கும் வகையில்; அண்ணா பதக்கங்கள் வழங்கிட முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.
பதக்கங்கள் பெறுகின்ற அலுவலர்களுக்கு அவரவர் தம் பதவிக்கேற்றவாறு, பதக்க விதிகளின்படி ஒட்டு மொத்த மானியத் தொகையும் வெண்கல பதக்கமும் அளிக்கப்படும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பின்னர் நடைபெறும் விழா ஒன்றில், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்குவார்கள்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு கொலை, கொள்ளை, திருட்டு, சங்கிலி பறிப்பு ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட, தலைமறைவாக இருந்த குற்றவாளி இராமையா என்கிற ரமேஷ் என்பவரை 6.11.2016 அன்று பிடிக்கும் பொழுது திருநெல்வேலி மாநகரம், கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றும் திரு. பா. திருமலை நம்பியை குற்றவாளி இரும்பு கம்பி கொண்டு தாக்கியதில் தனது இடது தொடையில் காயப்பட்டார். எனவே அவரது தன்னலம் கருதாத கடமையுணர்ச்சி மிகுந்த வீரதீர செயலை பாராட்டி
அவருக்கு காவல் துறைக்கான தமிழக முதலமைச்சரின் வீர தீர செயலுக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பரிசு தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளது.
பதக்கங்கள் பெறும் அனைத்து காவல்துறையினருக்கும், சிறை துறை காவல் அதிகாரிகளுக்கும் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.