கோவை : கருமத்தம்பட்டி அருகே காமாட்சியம்பாளையம் ரெயில்வே கேட் பகுதியில், சந்தேகப்படும் வகையில் 3 நபர்கள் நின்று கொண்டு இருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற தனிப்படை காவல் துறையினர் , சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் உடனடியாக காவல் நிலையம் அழைத்து வந்து மூவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில், சூலூர் முதலிபாளையம் பகுதியை சேர்ந்த முருகன் (40), மற்றும் சென்னை பகுதியைச் சேர்ந்த சபி முகமது (38), மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிபின் பிரிக் (28), என்பது தெரியவந்தது.
3 பேரும் கஞ்சா விற்பனையில், ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து மூவரிடம் இருந்து சுமார் 12 கிலோ கஞ்சா மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். மேலும் முருகன் என்பவர் ஏற்கனவே பல்வேறு கஞ்சா வழக்குகளில், கைதாகி சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனிப்படை காவல் துறையினர், மேலும் விசாரணை மேற்கொண்டதில் ஆந்திரா பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மூவரும் தனித்தனியாக பிரித்து விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர். மூவரையும் கைது செய்த தனிப்படை காவல் துறையினர், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.