தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம்: 01.04.2022 தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மனைவியை கொன்ற கணவனுக்கு தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 1,000/- அபராதம் விதித்து தீர்ப்பு – இவ்வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம் தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாந்தி நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் சுடலைமணி (40) மனைவி பார்வதி. சுடலைமணி சரிவர வேலைக்குச் செல்லாமல் குடித்து விட்டு தனது மனைவி பார்வதியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 29.06.2016 அன்று சுடலைமணிக்கும் அவரது மனைவி பார்வதிக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட பிரச்சனையில் சுடலைமணி பார்வதி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலைமணியை கைது செய்தனர். இவ்வழக்கை அப்போதைய தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் என்பவர் புலன் விசாரணை செய்து 16.08.2016 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் அவர்கள் இன்று (01.04.2022) குற்றவாளி சுடலைமணி என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 1,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் அவர்களையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் திரு. சேவியர் ஞானபிரகாசம் அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர் பன்னீர்செல்வம் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.