கடலூர்: கடலூர் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி கடலூரில் நடந்தது. டவுன்ஹாலில் இருந்து புறப்பட்ட பேரணியை துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் மணி, போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் செல்வம், பட்டா பிராமன், காவல் ஆய்வாளர்கள் சரவணன், உதயகுமார், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி ஊழியர்கள் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து சென்றனர். இந்த பேரணி பாரதிசாலை, அண்ணாபாலம், உழவர் சந்தை, கோ-ஆப்டெக்ஸ் சிக்னல் வளைவில் திரும்பி மீண்டும் டவுன்ஹாலை வந்தடைந்தது. முன்னதாக வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது. வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
அப்போது வாகன ஓட்டி ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடி இரு சக்கர வாகனத்தில் வந்தார். இதை பார்த்த காவல்துறையினர் அவரை பாராட்டி பூங்கொத்து கொடுத்து ஊக்கப்படுத்தினர். தொடர்ந்து மற்ற வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் போக்குவரத்து காவல் உதவி-ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.