ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கற்களை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த ஒருவரிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். ராமநாதபுரம் நகர் போலீஸாருக்கு வைரம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் மதியம் ராமநாதபுரத்தில் கீழக்கரை ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் வந்த அரசு பேருந்தில் கீழக்கரை புது கிழக்குத் தெருவைச் சேர்ந்த முகம்மது காசீம் மகன் யூசுப் சுலைமான்(36) என்பவரை பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஒரு பையில் வைரக்கற்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.
மேலும் அவர் ஒரு வியாபாரி என்றும், தேவிபட்டினத்தைச் சேர்ந்த வைர வியாபாரியிடம் விற்கக் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரிடம் வைரத்திற்கான எந்த ஆவணங்களும் இல்லாததால், அவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்த பல கோடி மதிப்புள்ள 160.08 கிராம் எடையுள்ள வைர கற்களையும் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். இது கடத்தல் வைரமா என போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் டிஎஸ்பி ராஜா கூறியதாவது, ”யூசுப் சுலைமானிடம் வைரக்கற்களுக்கான எந்த சான்றும் இல்லை. அதனால் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறோம். சரியான ஆவணங்களை காண்பித்தால் அந்தக் கற்கள் ஒப்படைக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட வைரக்கற்கள் பட்டை தீட்டப்படாததால் அதற்கான மதிப்பீடு செய்ய முடியவில்லை. இருந்தபோதும் வைர கற்கள் தானா? அதன் மதிப்பு என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.