தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் ,நேற்று அதிகாலை நடந்த தேரோட்டத்தின் போது, உயர் மின்னழுத்த கம்பியில் தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின், நேரில் சென்று உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறினார். தஞ்சை மாவட்டம் மேலவெளி ஊராட்சி களிமேடு, கிராமத்தில் அப்பர் மடம் உள்ளது. உயிர் கொலை பாவம் என கருதிய ஊர் பெரியவர்களால் 100 ஆண்டுகளுக்கு முன் இந்த மடம் உருவாக்கப்பட்டது.
இங்கு தஞ்சை பாணி ஓவியத்தில் அமைந்த அழகிய அப்பர் பெருமான் ஓவியம் உள்ளது. இது 300 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் குருபூஜை நாளன்று மலர்களால் அலங்கரித்து அப்பர் ஓவியம் தாங்கிய தேர் வீதி உலா வரும். வீடுகள் தோறும் பூஜை நடத்தி மக்கள் வழிபாடு நடத்துவர். கடந்த சில ஆண்டுகளாக மடத்தில் அப்பர் உருவச்சிலை வைக்கப்பட்டு ஊர்வலம் நடந்து வருகிறது. களிமேடு அப்பர் மடத்தில் 94ம் ஆண்டு சித்திரை சதய விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் தேரோட்டம் துவங்கியது.
அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அப்பர் பெருமான் உருவச்சிலை வைக்கப்பட்டது. தேரில் 20 அடி உயரத்துக்கு வண்ண மின்விளக்கு அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. தெருக்களுக்குள் தேர் ,செல்வதால் மின் கம்பிகளில் உரசாத வகையில் மடக்கி நிமிர்த்தும் வகையில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். எல்லா தெருக்களுக்கும் தேர் சென்றது. குறுகிய தெருக்களுக்குள் தேர் சென்று, வந்ததால் மேலே செல்லும் உயர் மின்னழுத்த வயர்களில் ,அலங்கார வளைவு உரசாத வகையில் அதை மடக்கி நிமிர்த்தி கொண்டு சென்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் களிமேடு தெற்கு தெருவில் தேர் சென்றபோது மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியை அலங்கார வளைவு மடக்கி நிமிர்த்தி செல்லும் பணியில் உள்ளவர்கள் கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மின்வயர் மீது அலங்கார வளைவு, உரசியதில் தேரில் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றி எரிய தொடங்கியது. இதில் தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற களிமேட்டை சேர்ந்த மோகன் (22), ராணுவவீரர் பிரதாப் (47), அன்பழகன் (60), இவரது மகன் ராகவன் (24), சந்தோஷ் (15), செல்வம் (56), ராஜ்குமார் (14), சாமிநாதன் (56), கோவிந்தராஜ் (50), நாகராஜ் (60) ஆகிய 10 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், களிமேடு பகுதி மின்வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள், மின்சாரத்தை துண்டித்ததோடு, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார், மற்றும் மின்வாரிய ஊழியர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டனர். தஞ்சையில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விபத்து நடந்த தேரில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதற்கிடையில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக வரவழைக்கப்பட்டன.
மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன் (48), கலியமூர்த்தி (40), இவரது மகன் ஹரிஸ்ராம் (13), சுமித்தா (33), மதன் மகன் நிதிஸ்ராம் (13), மாதவன் (22), மோகன் (54), விஜய் (23), அன்பரசு (32), விக்கி என்ற விக்னேஷ் (21), திருஞானம் (36), ஹரிஹரன் (14), பரணி (13), கவுசிக் (13), தினேஷ் (20), அருண் குமார் (24), ராமசாமி (48), செந்தில் (49) ஆகிய 18 பேர் ஆம்புலன்சில் தஞ்சை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரணி இறந்தான். இதனால் பலியானோர், எண்ணிக்கை 11ஆக உயர்ந்தது. காயமடைந்த 17 பேருக்கு 25 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தகவலறிந்த மாவட்ட கலெக்டர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எஸ்பி திருமதி. ரவளி பிரியா ,ஆகியோர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு உத்தரவிட்டனர். சம்பவம் நடந்த களிமேடு பகுதியை திருச்சி மத்திய மண்டல ஐஜி திரு. பாலகிருஷ்ணன், நேரில் சென்று பார்வையிட்டார். இந்த விபத்து குறித்து க ள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்த தகவல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து முதல்வர், தஞ்சை மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை உடனடியாக தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தார்.
அங்கு அவர் விபத்து நடந்த இடத்தை ,நேரில் பார்வையிட்டார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று மதியம் விமானத்தில் சென்றார். அங்கிருந்து காரில் தஞ்சை சென்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் . அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும்படி மருத்துவ குழுவினரை கேட்டுக் கொண்டார். அதனைத்தொடர்ந்து சம்பவம் நடந்த களிமேடு கிராமத்திற்கு சென்ற முதல்வர், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விபரம் கேட்டறிந்தார். பலியானவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சத்தை வழங்கினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராதவிதமாக, தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர், என்ற துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் . மேலும், இவ்விபத்தில் காயமடைந்த 15 பேருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் உடனடியாக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
சோகத்தில் மூழ்கிய கிராமம் பிரேத பரிசோதனை , செய்யப்பட்ட பின், களிமேடு கிராமத்திற்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் உடல்கள் எடுத்து செல்லப்பட்டது. அங்கு 11 பேரின் உடல்களும் பொதுமக்கள் ,அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள், பொதுமக்கள் கதறி அழுது அஞ்சலி செலுத்தினர். இறந்தவர்களின் உடல்களுக்கு அமைச்சர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவத்தால் களிமேடு மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களும் சோகத்தில் மூழ்கியது.
தண்ணீர் ஊற்றியதால் விபரீதம், தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் மொத்தம் 4 தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு வீட்டின் முன்பும் தேர் நின்று செல்வது வழக்கம். அப்போது கிராம மக்கள் தேரின் முன்பகுதியில் தண்ணீரை ஊற்றி வழிபாடு செய்வார்கள். தேர் சுமார் 1 கி.மீ தூரத்துக்கு சுற்றி வர இருந்ததாக தெரிகிறது. தேர் செல்லும் பகுதியில் தண்ணீர் ஊற்றியதால், சாலையில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. இதுவும் மின்சாரம் பாய்ந்து அதிக உயிர்ப்பலிக்கு காரணமாகி விட்டது.
திமுக 2 லட்சம் நிதியுதவி திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை; தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், பலியான 11 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதமும் காயம் அடைந்த 14 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதமும் திமுக சார்பில், மொத்தம் ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளார். ஜிஹெச்சில் அலை மோதிய மக்கள் களிமேடு தேரோட்டத்தில், படுகாயமடைந்த 17 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவமனை வாசலில் களிமேடு பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் நேற்று காலை முதல் குவிந்தனர். இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சிகிச்சை அளித்த மக்கள் தேர் விபத்தில் உயிருக்கு, போராடிய பிரதாப், ராகவன், சாமிநாதன், ராஜ்குமார், சிறுவன் பரணி ஆகிய 5 பேருக்கு சம்பவ இடத்தில் இருந்த பிரபாகர் (32), செல்வக்குமார் (27), சிவப்பிரியன் (32) ஆகியோர் நெஞ்சு பகுதியை அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவர்களது வாய் வழியாக தங்களது மூச்சு காற்றை அளித்தும் அவர்கள் சம்பவ இடத்திலேயே 4 ேபர் இறந்தனர். மருத்துவமனையில் சிறுவன் பரணி இறந்தான். முதலுதவி சிகிச்சை அளித்தவர்கள் கூறுகையில், தெருவின் திருப்பத்தில் தேரை திருப்பியபோது பக்கவாட்டில் சென்ற மின்கம்பி மீது அலங்கார வளைவு உரசியது. இதில் மின்சாரம் தாக்கி அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவரின் எலும்புகள் முற்றிலும் உருகியது. விபத்தை நேரில் பார்த்த எங்களுக்கு மயக்கமே வந்து விட்டது என்றனர்.
செல்ல மகனை பறி கொடுத்த தாய் உருக்கம், விபத்தில் பலியான 11 பேரில், 15 வயது சிறுவன் சந்தோசும் ஒருவர். இவரது உடலை பார்த்து தாய் ரேணுகா, கதறி அழுத காட்சி பொதுமக்களை கண்கலங்க வைத்தது. அப்போது அவர் கூறுகையில், சந்தோஷ், யாசிகா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் ராஜா, ஓராண்டுக்கு முன்பு இறந்தார். கஷ்டப்பட்டு இரண்டு பிள்ளைகளை வளர்த்து வந்தேன். திருவிழாவை பார்க்க சந்தோஷ் ,ஆர்வமாக சென்றான். தேரை இழுத்து வந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் ஒரே செல்லமகன் சந்தோஷை இழந்து விட்டேன். ஏற்கனவே எனது கணவர் இறந்த துக்கமே என்னை விட்டு இன்னும் அகலவில்லை. ஆசையாய் வளர்த்த மகனும் இறந்துவிட்டான்.
தற்போது நானும், என் மகளும் அனாதையாக நிற்கிறோம். எங்கு சென்றாலும் என்னிடம் சொல்லிவிட்டு செல்வாயே மகனே,உன்னை இழந்து நானும் உன் தங்கையும் எப்படி வாழப் போகிறோம். எங்களுக்கு என்று யார் இருக்கிறார்கள். எங்களை தவிக்க விட்டு சென்று விட்டாயே என்று கண்ணீர் மல்க கூறியது அனைவரையும் கண்கலங்க வைத்தது. தந்தை, மகன் பலி தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியை சேர்ந்த தொழிலாளி அன்பழகன்(60), அவரது மகன் ராகவன்(24) ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு நடந்த தேரோட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் 2 பேரும் தேரை இழுத்து சென்றனர். அப்போது மின்சாரம் தாக்கி இருவரும் பரிதாபமாக பலியாகினர். ஒரே குடும்பத்தில் தந்தை, மகன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காப்பாற்ற முயன்றவரும் பலி, மின்சாரம் தாக்கி பலியானவர்களில் தொழிலாளி சாமிநாதனும் (56) ஒருவர். தேருக்கு முன் சென்று கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே கிடந்த ஒருவரை காப்பாற்று வதற்காக அவரை தொட்டு தூக்கினார். அப்போது சாமிநாதன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவரும் பலியானார். பலியான முன்னாள் ராணுவ வீரர் தேர் தீ விபத்தில் இறந்த முன்னாள்” ராணுவ வீரர் பிரதாப், கிராம இளைஞர்கள் படிப்போடு மற்றும் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும்” என்ற எண்ணத்தில் களிமேடு பகுதியை சேர்ந்த, இளைஞர்களுக்கு விளையாட்டு கலைகள் கற்றுக்கொடுத்துள்ளார். களிமேட்டு கிராமத்தில் நடக்கும் விழாக்களிலும், பொதுமக்களின் வீட்டு நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்வார்.
முதலாவதாக உயிரிழந்த அப்பர் மடம் பூசாரி மின்சாரம் தாக்கி உயிரிழந்த செல்வம் என்பவர் அப்பர் மடம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள, கோயில்களுக்கு பூசாரியாக இருந்துள்ளார். நேற்று அதிகாலை நடந்த தேரோட்டத்தில் சுவாமிக்கு தீபாராதனை காண்பித்து வந்தார். தேரில் மின்சாரம் பாய்ந்ததும் இவர்தான் முதலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 93 ஆண்டுகளாக அசம்பாவிதம் நடைபெறாத தேரோட்டம், ஆண்டு தோறும் பெரியவர்களும், சிறியவர்களும் மார்கழி மாதத்தில் நாள்தோறும் அதிகாலை எழுந்து, குளித்து, திருநீறு அணிந்து தெருக்களின் வழியாக தேவாரப்பாடல்களை, இசைத்தபடி சென்று அப்பர் மடத்தை அடைந்து வழிபாடு செய்வர். இங்கு 93 ஆண்டுகளாக தொடர்ந்து சித்திரை சதய நாளில் அப்பர், சுவாமிக்கு குரு பூஜை விழா நடந்து வருகிறது. இதுவரை நடந்த சதய விழாவில் ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த 94வது ஆண்டு சித்திரை சதய நாளில் விபத்து நடந்துள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன்பு, களிமேடு கிராமம் அருகே உள்ள கங்கா நகரில் மின் மயானம் அமைப்பதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயர் மின் அழுத்த கம்பி அமைக்கப்பட்டது. கிராமப் பகுதியில் மின் உயர் அழுத்த கம்பி அமைக்க கூடாது என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி உயர் மின்னழுத்த கம்பி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக, தேர் விழாவை முன்னிட்டு, களிமேடு கிராமத்தில் உள்ள மின்கம்பங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆனால் இந்த உயரழுத்த கம்பியில் மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சம் அதிமுக சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: இந்த சோக சம்பவத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆழ்ந்த, இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சமும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
தஞ்சை அருகே நடந்த தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் சமூக வலைதலங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட பதிவில், ‘தஞ்சாவூரில் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி குழந்தைகள் உள்பட பலர் பலியாகியிருப்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத துயரமாக உள்ளது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். திரு.பிரதமர் மோடி, வெளியிட்ட பதிவில், ‘தஞ்சாவூரில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள், என நம்புகிறேன். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்தது எப்படி? விபத்தை நேரில் பார்த்த அசோகன் (62) கூறுகையில், ‘‘தேர் நள்ளிரவு 12 மணியளவில் ஊர் மக்களால் இழுத்து வரப்பட்டது. அதிகாலை 3.30 மணியளவில் தெற்கு தெருவில் உள்ள வளைவில் திரும்பியது. தேரின் இடது புற சக்கரம் சாலையில் இருந்து கீழே இறங்கியது. அப்போது, தேரின் மேல் உள்ள அலங்கார பகுதி உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது. இதைத் தொடர்ந்து, தேரில் தீப்பற்றியது. இதையடுத்து தேரில் இருந்தவர்கள் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர். மின் கம்பி செல்லும் இடங்களில் தேரின் மேற்பகுதியில் உள்ள அலங்கார பகுதியை பெரிய கம்பு மூலம் வளைப்பது வழக்கம். அதிகாலை நேரம் என்பதால், கம்பு மூலம் வளைப்பதை மறந்து விட்டதாக தெரிகிறது. இதனாலேயே உயரழுத்த மின்கம்பி மீது தேரின் அலங்கார பகுதி உரசியது,’’ என்றார்
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்