திருநெல்வேலி : துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் , அம்பாசமுத்திரம் வரை மாநில நெடுஞ்சாலை, தமிழக அரசு சார்பில், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், 282 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டு நடக்கிறது. திருநெல்வேலி , சேரன்மகாதேவி இடையே, பத்தமடையில் சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. நேற்று காலை 10:30 மணிக்கு சாலையோரம், இருந்த பழமையான ஆலமரத்தை மண் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றினர். அப்போது வாகன போக்குவரத்தை , தடுக்கவில்லை. அவ்வழியாக சென்ற ஆட்டோ மீது ஆலமரம் விழுந்தது.
ஆட்டோ ஓட்டிய பத்தமடை , காதர் மைதீன், (34), அவரது மனைவி பக்கீராள் பானு, மகன் ஷேக்மைதீன், மனைவியின் தங்கைரஹ்மத் பீவி, (25), அவரது மகள் அசீதா பாத்திமா, இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். காதர்மைதீன், ரஹ்மத் பீவி, சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு, சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் பத்தமடை , சேரன்மகாதேவியில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். எஸ்.பி., திரு. சரவணன், சேரன்மகாதேவி, துணை ஆட்சியர் திருமதி. சிந்து, மற்றும்காவல் துறையினர், பேச்சு நடத்தினர்.
விபத்தால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம், மற்றும் அரசு வேலை கோரினர். சம்பவத்தில் அஜாக்கிரதையாக பணியில் ஈடுபட்ட மண் அள்ளும் இயந்திர டிரைவர், ஒப்பந்தக்காரர்கள் மீது பத்தமடை காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்தனர். இறந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் , வழங்குவதாக முதல்வர் திரு. ஸ்டாலின், அறிவித்துள்ளார்.