விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில், கந்துவட்டி கொடுமைக்கு ஆளாகியிருப்பவர்கள் எந்தவித பயமும், தயக்கமும் இல்லாமல் காவல் நிலையங்களில், புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மனோகர், அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது தொழில்களுக்காகவும் மற்றும் குடும்பத் தேவைகளுக்காகவும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் பணம் பெற்று, அதனை வட்டியுடன் திரும்ப செலுத்துகின்றனர். ஆனாலும் வாங்கிய பணத்தை விட அதிகமாகவும், பணம் கட்டி முடித்தவுடன், மேலும் கூடுதலாக பணம் கேட்டு தொந்தரவிற்கு ஆளாகும் நிலை ஏற்படலாம்.
அப்படி பொதுமக்கள் யாருக்காவது, வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடமிருந்து அச்சுறுத்தலோ, மிரட்டலோ வந்தால் அது குறித்து மாவட்டத்தில், உள்ள காவல் நிலையங்களில், எந்தவித பயமும், தயக்கமும் இல்லாமல் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் மீது சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள். கந்துவட்டிக்கு பணம் கொடுத்த நபர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பில், தகவல் வெளியிட்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி