சென்னை : சென்னை சவுகார்பேட்டை, தங்கசாலையைச் சேர்ந்தவர் சுரேஷ், (46), சென்னை காசிசெட்டி தெருவில், ‘பேக்’ ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இவரை சந்தித்த மர்ம நபர், 2.5 கிலோ தங்க காசுகளைக் கொடுத்து, 30 லட்சம் ரூபாய் வாங்கிச் சென்றுள்ளார். சுரேஷ் வீட்டிற்குச் சென்று, அந்த காசுகளை சோதித்த போது, அவை ‘பித்தளை’ என தெரிந்தது. இது குறித்து, சுரேஷ், நேற்று முன்தினம் இரவு, ஓட்டேரி காவல் நிலையத்தில், புகார் செய்தார். சுரேஷிடம் காவல் துறையினர், விசாரித்தனர்.அதில், சுரேஷின் தந்தை ஜீத்மலுக்கு, அறிமுகமான பெயர், முகவரி தெரியாத நபர் ஒருவர், சமீபத்தில் ஜீத்மலிடம் 1 கிராம் கொண்ட, நான்கு தங்க காசுகளை விற்று, 10 ஆயிரம் ரூபாய் வாங்கிச் சென்றுள்ளார். இதையடுத்து, மூன்று நாட்களுக்கு முன் அதே நபர், ஜீத்மல் வாயிலாக அவரது மகன் சுரேஷை சந்தித்துள்ளார்.
அப்போது, தன்னிடம், 4 கிலோ தங்க காசுகள் இருப்பதாகவும், அதை 90 லட்சம் ரூபாய்க்கு தருவதாகவும், கூறியுள்ளார். சுரேஷ், தன்னிடம் அவ்வளவு பெரிய தொகை இல்லை என மறுத்துள்ளார்.நேற்று முன்தினம், மீண்டும் அந்த நபர் சுரேஷை தொடர்பு கொண்டு பேசிய போது, தன்னிடம் 30 லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளதாக, கூறியுள்ளார்.
அதற்கு மர்ம நபர், ‘உங்கள் அப்பா எனக்கு தெரிந்தவர். அதற்காக, உங்களிடம் வியாபாரம் செய்கிறேன். உங்களிடம் உள்ள பணத்திற்கு ஏற்ற வகையில், 2.5 கிலோ தங்க காசுகளை தருகிறேன்’ என, நட்பாக பேசியுள்ளார். சுரேஷ் இதற்கு சம்மதித்து, அயனாவரம், குன்னுார் சாலையிலுள்ள தாதாவாடி ஜெயின் டிரஸ்ட் அருகே, 30 லட்சம் ரூபாயை கொடுத்து, தங்க காசுகளை வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்று அவற்றை சோதித்த போது, அனைத்தும் பித்தளையாக இருந்துள்ளது. மர்ம நபர், நட்பாக பேசி, சுரேஷை ஏமாற்றி பணம் பறித்தது, தெரிந்தது. வடமாநில நபராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்படி, காவல் துறையினர், அவரை தேடி வருகின்றனர்.