சென்னை : சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில், இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம், கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில், ஈடுபட்டு வந்தனர். அப்போது மும்பையில் இருந்து வந்த விமானத்தில், பயணம் செய்த தஞ்சாவூரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் (28), என்பவரை சந்தேகத்தின்பேரில், நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ரகசிய அறைகளில் தங்க நகைகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.39 லட்சம் மதிப்புள்ள 855 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில், பயணம் செய்த சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த முகமது சபீக் (32), ராமநாதபுரத்தை சேர்ந்த மிரஷாத் அலி (30), ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். பின்னர் இருவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் இருவரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்புள்ள 2½ கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள். சென்னை விமான நிலையத்தில், 3 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 355 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.