கடலூர்: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 25-ந் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பக்தர்கள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவதும், பின்னர் அந்த சிலைகளை நீர் நிலைகளுக்கு ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பதும் வழக்கம். இந்த விழாவையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி விருத்தாசலம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதற்கு கோட்டாட்சியர்(பொறுப்பு) தங்கவேல் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் பன்னீர்செல்வம், ரத்னாவதி, செல்வியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாதவகையில் விழாக்குழுவினர் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை நடத்த வேண்டும். விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய காவல்துறையினரிடம் முன் அனுமதி பெற வேண்டும். மேலும் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே விநாயகர் ஊர்வலத்தை நடத்த வேண்டும், சிலை இருக்கும் இடத்தில் தீ விபத்துகள் ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மங்கலம்பேட்டையில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் வெளியூர்களில் இருந்து வரும் நபர்களுக்கு அனுமதி கிடை யாது. இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் திரு.ராஜதாமரைபாண்டியன், திரு.ரவிச்சந்திரன், திரு.ரமேஷ்பாபு, சீனுவாசன், வருவாய் ஆய்வாளர்கள் சுமதி, பிரகாஷ், பா.ஜ.க. மணிகண்டன், சிவா, அகில பாரத இந்து மகா சபா மாநில செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.