சென்னை : சென்னை பெரவள்ளூரை சேர்ந்தவர் பானுமதி (40), இவருக்கு குழந்தை இல்லாததால் தனது அக்கா மகன் பிரசாந்த் (20), என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்ததாக தெரிகிறது. பானுமதியின் கணவர் சிவகுமார், 2020-ம் ஆண்டு வங்கியில் இருந்து ரூ.50 லட்சம் கடன் வாங்கி வீட்டில் வைத்து இருந்தார். அதில் ரூ.20 லட்சம் திருடு போனது. இதில் பானுமதிக்கு பிரசாந்த் மீது சந்தேகத்தை, ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரசாந்த் சரியான விளக்கம் கொடுக்காததால் பானுமதி தனது உறவுக்காரர் கார்த்திக் என்பவரிடம் கூறினார். இந்தநிலையில் கார்த்திக், தனது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று காலை பெரம்பூர் அடுத்த அகரம் சந்திப்பில், இருந்த பிரசாந்தை மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றார்.
அம்பத்தூர் அருகே செல்லும்போது பிரசாந்த் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினரிடம், தன்னை கடத்திச்செல்வதாக கூச்சலிட்டார். உடனே அங்கிருந்த காவல் துறையினர், பிரசாந்த் உள்பட 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேரையும் மடக்கி பிடித்து பெரவள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். உதவி ஆணையர் திரு. ஈஸ்வரன், செம்பேடு பாபு தலைமையில் காவல் துறையினர், விசாரணை நடத்தினர். பின்னர் பட்டப்பகலில் மோட்டார்சைக்கிளில், வாலிபரை கடத்தியதாக மாதவரத்தை சேர்ந்த விக்னேஷ் (24), அம்பத்தூரை சேர்ந்த வசந்த் (27), தேனியை சேர்ந்த முகமது அனாஸ் (25), மற்றும் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஆதித்யா (19), ஆகிய 4 பேரை காவல் துறையினர், கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில், தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.