மதுரை : மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (23), இதே பகுதியைச் சேர்ந்தவர் சைக்கோ கண்ணன் (24), இவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சைக்கோ கண்ணன் சென்றுள்ளார். அப்போது அவரை பிரவீன்குமார், முந்திச்சென்றுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் அதே ஆண்டில் ஆயுதபூஜையன்று, அங்குள்ள கோவிலில் பிரவீன் குமார் இருந்தார். அங்கு சென்ற சைக்கோ கண்ணன், தனது நண்பர்கள் அட்டோரி ராஜவேலு, பாலகணேஷ், விக்னேஷ், மற்றும் 2 சிறுவர்கள் என மொத்தம் 6 பேர் சேர்ந்து பிரவீன்குமாரை சரமாரியாக தாக்கினர்.
இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் , கொலை வழக்குபதிவு செய்து, அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில், வக்கீல் எஸ்.கருணாநிதி ஆஜரானார். 2 சிறுவர்கள் மீதான வழக்கு மட்டும் சிறுவர்களுக்கான கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. மற்றவர்களின் மீதான வழக்கு விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து சைக்கோ கண்ணன், அட்டோரி ராஜவேலு, பாலகணேஷ், விக்னேஷ் ஆகிய 4 பேருக்கும் தலா ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி நேற்று தீர்ப்பளித்தார். விக்னேசுக்கு மட்டும் ரூ.60 ஆயிரம் அபராதமும், மற்ற 3 பேருக்கு தலா ரூ.65 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி