சென்னை: மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள் அல்ல என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை வீசியது உட்பட பல்வேறு கறார் நடவடிக்கை மேற்கொண்டது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள், கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் சென்னை கமிஷனர் ஜார்ஜ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள் அல்ல. காவல் துறையினர் மற்றும் வாகனங்கள் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில் 94 காவலர்கள் காயம் அடைந்தனர். 51 காவல் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. சமூக விரோத சம்பவத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.
மெரினாவில் போராட்டக்காரர்களிடம் அரசு எடுத்த நடவடிக்கைகள், ஜல்லிக்கட்டு சட்டம் குறித்தும் காவல் துறை சார்பில் பல முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் மிகவும் பொறுமையாக பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார்.
போராட்டம் துவக்கத்தில் அமைதியாக அறவழியில் சென்றது. அதை காவல் துறை தரப்பிலும் பாராட்டினோம். போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியது உளவுத் துறை மூலம் தெரியவந்தது. அந்த நபர்கள் மாணவர்களையும் இளைஞர்களையும் தவறான வழியில் கொண்டு சென்றார்கள்.
ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நிறைவேறிய பிறகு கலைந்து செல்ல அறிவுறுத்தினோம். அறவழியில் போராடிய பெரும்பாலான மாணவர்கள் கலைந்து சென்றனர். சில பிரிவினர் மட்டுமே தொடர்ந்து போராடினர், என்றார்.