வரையாடு மற்றும் குரங்குகளுடன் ‘செல்பி’ எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை எச்சரித்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனசரக பகுதியில், வன விலங்குகளுக்கு தேவையான உணவுகள் கிடைக்காத சூழலில் அவற்றின் உணவுத் தேவைக்காக வனத்தின் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லும். அப்போது வால்பாறை சாலையை கடந்து செல்ல வேண்டி இருக்கும். வாகனங்களின் குறுக்கீடு, மனித நடமாட்டம் ஆகிய காரணங்களால் சாலையின் ஓரத்தில் சில நேரங்களில் காத்திருக்கின்றன.
வால்பாறைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வால்பாறை செல்லும் வழியில் குரங்கு அருவி மற்றும் ஆழியார் அணை காட்சிமுனை பகுதியில் குரங்குகள் மற்றும் வரையாடுகள் சகஜமாக உலா வருகின்றன. வரையாடுகள் சாலையில் நடமாடும்போது அந்த வழியாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வக்கோளாறில் அவற்றின் அருகே நின்று ‘செல்பி’ புகைப்படம் எடுக்கின்றனர். இதனால் அச்சமடையும் வரையாடுகள் ஆபத்தான பாறை சரிவுகளில் ஓடி மறைகின்றன. குரங்குகளை துன்புறுத்தி அவற்றுடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
இது குறித்து பொள்ளாச்சி வனச்சரகர் காசிலிங்கம் கூறியது:-
‘பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வனவிலங்குகளின் அருகே சென்று சுற்றுலா பயணிகள் ‘செல்பி’ எடுக்கக் கூடாது. இதனை மீறும் சுற்றுலா பயணிகள் மீது பாரபட்சமின்றி அபராதம் விதிக்கப்படும். வாகன ரோந்து மூலம் இன்றுமதல் தீவிரமாக கண்காணிக்கப்படும் ’ என்றார்.