சேலம் : ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பக்காராம் (32), தினேஷ் (19), பிரகாஷ் (24), இவர்கள் கடந்த மாதம் 2-ந் தேதி கூட்டாளிகளுடன் சேர்ந்து புகையிலை பொருட்கள் கடத்தலில், ஈடுபட்டதுடன் பணம் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமாக சேலம் பட்டை கோவில் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த ஜெய்ராம் என்பவரை கடத்தி சென்றனர். இதுதொடர்பாக சேலம் டவுன் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மீது ஏற்கனவே செவ்வாய்பேட்டை மற்றும் டவுன் காவல் நிலையங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
ஆள்கடத்தல் மற்றும் புகையிலை பொருட்கள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் பக்காராம், தினேஷ், பிரகாஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி காவல் துணை ஆணையர் திருமதி. லாவண்யா, காவல் ஆய்வாளர் திரு .பிரகாஷ், ஆகியோர் சேலம் மாநகர காவல் ஆணையர் திரு. பிரவீண்குமார் அபினபுக்கு, பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து பக்காராம், தினேஷ், பிரகாஷ் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யகாவல் ஆணையர், உத்தரவிட்டார். விபசார வழக்கில் சிக்கியவர் இதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (42), இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு விபசார வழக்கில் அன்னதானப்பட்டி காவல்துறையினர், கைது செய்தனர். தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயல்களில், ஈடுபட்டு வரும் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை பரிசீலித்து சரவணனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்