இந்திய கடலோர காவல் படைக்கு ‘லார்சன் அண்டு டூப்ரோ’ நிறுவனம் பாதுகாப்பு அமைச்சகத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 7 ரோந்து கப்பல்களை தயாரித்து வழங்கவேண்டும். அதன்படி உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ‘விக்ரம்’ என்ற ரோந்து கப்பலை ‘எல் அண்டு டி’ நிறுவனம் இந்திய கடலோர காவல்படையிடம் நேற்று ஒப்படைத்தது. தனியார் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டு, கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்ட முதல் கப்பல் இது.
இதற்கான விழா சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள ‘எல் அண்டு டி’ கப்பல் கட்டும் தளத்தில் நேற்று நடந்தது. கடலோர காவல்படையின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் வி.எஸ்.ஆர்.மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவருடைய மனைவி ஜோதி கப்பலை அறிமுகப்படுத்தினார். கிழக்கு மண்டல கடலோர காவல்படை ஐ.ஜி. ராஜன் பர்கோத்ரா, ‘எல் அண்டு டி’ கப்பல் கட்டுமான பிரிவு தலைமை அதிகாரி பி.கண்ணன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
‘விக்ரம்’ ரோந்து கப்பல் 98 மீட்டர் நீளம், 2,100 டன் எடை உடையது. அதிகபட்சமாக 26 கடல் மைல் வேகத்தில் செல்லும். தொலைதொடர்பு கருவிகள், ரேடார் கருவிகள், வழிகாட்டு கருவிகள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. தீ கட்டுப்பாட்டு கருவியுடன் கூடிய ஒரு ‘30 எம்.எம்.’ தானியங்கி துப்பாக்கி, இரண்டு ‘12.7 எம்.எம்.’ துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர் நிறுத்தும் வசதி உள்பட பல்வேறு அதிநவீன வசதிகள் இதில் உள்ளன.
இரவு, பகலாக ரோந்து சுற்றி கடலோர பகுதிகளில் கண்காணித்தல், மாசு தொடர்பான செயல்பாடுகளில் இந்த கப்பல் ஈடுபடுத்தப்பட உள்ளது. கப்பலின் ஆயுட்காலம் 30 முதல் 35 ஆண்டுகள். பல்வேறு சோதனைகளை முடித்தபின்னர், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடலோர காவல்படையில் இணைக்கப்பட்ட பின்னர், களத்தில் இறங்க உள்ளது. ‘எல் அண்டு டி’ நிறுவனம் அடுத்த 6 மாதத்தில் ஒவ்வொரு ரோந்து கப்பல்களாக கடலோர காவல்படையிடம் ஒப்படைக்க உள்ளது.
இந்த தகவல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.