ஈரோடு : கர்நாடகா மாநிலம் பெங்களூரு முருகேஷ்பாலயா பகுதியை சேர்ந்தவர் கோபகுமார். இவருடைய தாய் பங்கஜா நாயர் (76), இவர்கள் 2 பேரும் சொந்த மாநிலமான கேரளாவுக்கு சென்றிருந்தனர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி கொச்சிவேலி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில், கோட்டயத்தி்ல் இருந்து பெங்களூருவுக்கு சென்றார்கள். அவர்கள் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தனர். அப்போது பங்கஜா நாயர் தனது தலைக்கு அருகில் கைப்பையை வைத்திருந்தார். அந்த ரெயில் ஈரோட்டை தாண்டி சென்று கொண்டிருந்தபோது பங்கஜா நாயர் தூக்கத்தில், இருந்து எழுந்து பார்த்தார். அப்போது அவரது கைப்பையை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த கைப்பையில், அவர் ரூ.8½ லட்சம் மதிப்பிலான வைர நகை, 8¼ பவுன் தங்க நகைகள், ரூ.35 ஆயிரம் மதிப்பிலான செல்போன், கைக்கெடிகாரம் ஆகியவற்றை வைத்திருந்தார். இதையடுத்து அந்த ரெயில் பெங்களூருவுக்கு சென்றடைந்த பிறகு அங்குள்ள ரெயில்வே காவல் நிலையத்தில், பங்கஜா நாயரின் மகன் கோபகுமார் புகார் கொடுத்தார்.
பெட்டி தனிப்படை இந்த புகாரின்பேரில் பெங்களூரு ரெயில்வே காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ஈரோடு ரெயில்வே காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில், திருட்டு நடந்தது தெரியவந்தது. அதன்பிறகு கடந்த மே மாதம் 19-ந் தேதி இந்த வழக்கு ஈரோடு ரெயில்வே காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கொள்ளையனை பிடிக்க ரெயில்வே துணை காவல் சூப்பிரண்டு திரு. யாஸ்மின், ரெயில்வே பாதுகாப்பு படை சேலம் கோட்ட உதவிஆணையர் திரு. ரதீஸ்பாபு, ஆகியோரது உத்தரவின்பேரில் ரெயில்வே பாதுகாப்பு படை காவல் உதவி ஆய்வாளர் திரு. நிஷான்ந்த், காவல் உதவி ஆய்வாளர் திரு . கோபாலகிருஷ்ணன், ஏட்டு திரு .சரவணன், ரெயில்வே காவல் உதவி ஆய்வாளர் திரு. ரகுவரன், ஏட்டு திரு. கண்ணன், காவலர் திரு .ஜெயவேல், ஆகிய 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர், பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், ஈரோடு ரெயில்வே கூட்செட் பகுதியில், தனிப்படை காவல் துறையினர் , ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில், சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த ஒரு வாலிபரை பிடித்து காவல் துறையினர், விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் ஈரோடு ரெயில்வே காலனி குமரன்நகரை சேர்ந்த அபுதாகீரின் மகன் பைசல் (29), என்பதும், அவர்தான் பங்கஜா நாயரின் கைப்பையை திருடி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பைசலை கைது செய்த காவல் துறையினர் , அவரிடம் இருந்து வைர நகை, 6 கிராம் தங்க நகை, ஒரு செல்போன், ஒரு கைக்கெடிகாரம் ஆகியவற்றை மீட்டனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :