கோவை : மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் ஷார்ஜாவில் இருந்து ‘ஏர் அரேபியா’ விமானம் மே 6ம் தேதி காலை கோவை வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது ஆப்ரிக்க நாடான உகாண்டாவைச், சேர்ந்த பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை, அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் உகாண்டாவைச் சேர்ந்த, சான்ட்ரா நான்டசா (33), என்பதும் திருப்பூரில் உள்ள பின்னலாடை, தொழில் துறையினரை சந்திக்க வந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகளின், கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் வலுத்தது.
இதையடுத்து அப்பெண்ணை, ஸ்கேன் செய்து பார்த்த போது, அயன் சினிமா பட பாணியில் போதைப்பொருளை கேப்சூலில் அடைத்து விழுங்கி, கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பெண் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, காவல்துறையினர், பாதுகாப்புடன் சிகிச்சையில் வைக்கப்பட்டார்.அவர் வயிற்றிலிருந்த கேப்சூல்களை டாக்டர்கள் எடுத்தனர். பின் மருத்துவ கண்காணிப்பில், வைத்து அதிகாரிகள் அவரை கண்காணித்து வந்தனர். மூன்று நாட்களில் பெண்ணின் வயிற்றில் இருந்து, 81 கேப்சூல்களை அதிகாரிகள் வெளியே எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.
அப்போது கடத்தி வரப்பட்டது ‘மெத்தாபெத்தமைன்’ என்ற போதை மருந்து, என்பதும் இதன் சர்வதேச சந்தை மதிப்பு 4 கோடி ரூபாய் , என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போதை பொருள் எங்கிருந்து யாருக்காக கோவைக்கு கடத்தப்பட்டது, என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. நேற்று மதியம் சுங்கத்துறை அதிகாரிகள் உகாண்டா பெண்ணை கைது செய்து, கோவை மாவட்ட போதை பொருள் தடுப்பு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை சென்னை, புழல் சிறையில் அடைக்க அதிகாரிகள், நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.