தூத்துக்குடி: தூத்துக்குடியில் முதலீட்டு நிறுவனம் நடத்தி வாடிக்கையாளர்களிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த புகாரில், பெண் உள்ளிட்ட இருவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் பகுதியை சேர்ந்தவர் பொன்முனியசாமி (43), இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு மெஞ்ஞானபுரத்தை சேர்ந்த சிவ ராமகிருஷ்ணன், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த ராஜ் (41) , நயினார் மனைவி ஜெயலட்சுமி (52), ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். அப்போது, தாங்கள் சன்மேக்ஸ் என்ற முதலீட்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் 10 சதவீதம் லாபம் தருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.
இதனை நம்பிய பொன்முனியசாமி, தனது ரூ.18 லட்சத்தை அவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அத்துடன் மேலும், 5 பேர் சேர்ந்து மொத்தம் ரூ.36 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். உறுதி அளித்தபடி 3 பேரும் சில மாதங்கள் 10 சதவித லாபத்தை வழங்கி உள்ளனர். அதன் பின்னர், பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வ்ந்துள்ளனர். இதனால் முதலீட்டாளர்கள் பணத்தை திறப்பி கேட்டபோது, தொழில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் இதனால் பணத்தை திரும்ப தர முடியாது என்றும் கூறியுள்ளனர். மேலும், பணம் கேட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான பொன்முனியசாமி, இதுகுறித்து மாவட்ட எஸ்பி திரு. பாலாஜி சரவணனன் அவர்களிடம் புகார் அளித்தார்.
எஸ்பி உத்தரவின் பேரில், டிஎஸ்பி ஜெயராம் , மேற்பார்வையில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் வனிதா ராணி, உதவி ஆய்வாளர் காந்திமதி, தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், சிவ ராமகிருஷ்ணன், ராஜ் மற்றும் ஜெயலட்சுமி (52), ஆகியோர் முதலீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 36 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து ராஜ், ஜெயலட்சுமி, ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு போலிசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சிவராமகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.